Saturday, March 26, 2011

திருமந்திரத்தில் ஓக முறைகள்(யோக முறைகள்)

திருமந்திரத்தில் ஓக முறைகள்(யோக முறைகள்)
 

முன்னுரை:

                   திருமந்திரம் 8000 ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவசமய நூல். ( பார்க்க : சிவசமய வரலாறு பகுதி 1). திருமூலர் தன் உடன் பயின்றவராக புலிக்கால் முனிவரைக் கூறுகிறார். வடமொழி நூல்களின்படி புலிக்கால் முனிவர் வசிட்டரின் தங்கையை மணந்தவர். இக்கணக்கால் இக்காலம் கணிக்கப்பட்டது. ஆனால் வடமொழியாளர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு 1500 என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.எனவே திருமந்திரத்தின் காலத்தை கி.பி நூற்றாண்டுக்குக் கொண்டு வருவதும் உண்டு.


திருமந்திரத்திற்கு நான்கு வகையாகப் பொருள் கூற வேண்டும்


1) மந்திரப் பொருள்
2) தந்திரப் பொருள்
3) இயல்புப் பொருள்,
4) மெய்யறிவுப் பொருள்  என்பன அவை.




ஆனால் , இன்றுவரை இத்தகைய உரை தோன்றவில்லை. திருமந்திரத்தில் அருளியல் கூறுகளும், மறைபொருள் கூறுகளும், அறிவர்(சித்தர்) நெறிக் கூறுகளும் நிறைந்துள்ளன.  3000 பாடலுக்கு 3059 பாடல்கள் அச்சில் வந்துள. எனவே இங்கும் இடைச் செருகல் உண்டு என்பது அறியப்படும். எனவே இருக்கின்ற பாடல் முழுவதையும் அப்படியே ஏற்றுக் கொண்டு உரைகாண்பதைத் தவிர வேறு வழி இல்லை. மந்திரம், ஓகம் பற்றிய நூல்கள் பல இருந்து அழிந்தன என்பதை யாப்பருங்கல விருத்தி உரையால் அறியலாம். இன்று அறிவர் நெறிபற்றி முற்ற அறிந்தோர் எவரும் இலர். மேலும் 3500 ஆண்டுகளுக்கு முன்னர், பாரதம்  முழுவதும் தமிழே வழங்கியது. சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்தவற்றுள்   சிவனது ஓக இருக்கையும், முருகனது ஓக காட்சியும் இடம் பெறக்காணலாம். எனவே அறிவர் தம் ஓக நெறி பாரதம் முழுதும் பரவி இருந்ததற்கு சிந்துவெளி முத்திரைகளே சான்றாகும். அத்தகைய பழமையான ஓக முறைகளைச் சிவனும் முருகனும் பயிற்றுவித்தனர் என்பதைப் புராணங்க்கள் கூறும். சிவனை எல்லாம் வல்ல சித்தர் என்றும் பழனியைச் சித்தன் குடில் என்றும் கூறும் வழக்கைக் காண்க. இங்கு திருமூலர் கூறும் ஓக முறைகளை மேலோட்டமாக அல்லது அறிமுக நிலையில் மட்டுமே இக்கட்டுரை தொட்டுக் காட்டும்,


 அறிவர்கள் கண்ட ஓக முறைகள்:


தமிழ் அறிவர்கள் கண்ட அளப்பறிய பேராற்றல் நெறி ஓக நெறியாகும். மூல முதலில் இருந்து வந்த உயிர்கள் அந்த முதலின் மாயா சக்தியில் இருந்து உடலையும் உலகியல் இன்பத்தையும் பெற்றன. அந்த உடலின் கண் மூலத்தின் அணுவினும் அணுவாகிய உயிராற்றல் உட்புகுந்தது. தூய மெய்ஞானம் பெற்று விடுதலை பெற வேண்டிப் புகுந்த உயிர் வந்த நோக்கத்தை மறந்து பொறிவயப்பட்டது. பிறந்தும் இறந்தும் கிடப்பதே தொழில் எனக் கொண்டது. ஆதலால் அறிவர்களாகிய சித்தர்கள் ஓக முறையால் உயிர்கட்கு அகக்கண் திறந்து ஆனந்தத் தேன் சொறியும் சிவத்தின் அருளைக் காட்டினர்.எனவே ஓக சாதனைகள் கூற்றத்தை வெல்லும் எனக் கண்டனர். மக்களின் பக்குவ நிலைக்கேற்ப ஓக நிலைகள் மாறும் அதனால் பல்வகைப் பட்ட முறைகள் தோன்றின. ஓம் என்பது மூல மந்திரம்.மூலம் என்பது உயிர்களின் தோற்ற முதலாகிய பேராற்றல். ஓகு என்னும் யோகத்தின் வழி அந்த மூலத்துள் சென்று அதன் முதற்பொருளை அகக் கண்ணால் கண்டு அதனோடு கலந்து, கரைந்து நிட்டை கூடி நிற்றல் என்றும் பொருள் கொள்ளலாம். ஓம் என்னும் மூலத்துள் நுழையும் ஆற்றலே ஓகு எனப்பட்டது. இதனைப் பற்றி திருமந்திரம் விரிவாகவும் விளக்கமாகவும் கூறக் காணலாம். ஓகத்துக்கு வேண்டிய அடிப்படை ஒழுக்கம் இயமம் நியமம் எனப்படும்.
இயமம் எனப்படும் புறஒழுக்கம் பற்றிதி திருமந்திரம் 535 , 536 - ம் பாடல்களில் கூறக் காண்க. அவை 1.கொலை செய்யாமை 2. பொய்யாமை  3. கவலைப் படாதிருத்தல் 4. எண்குணத்துள் நிற்றல் 5. நல்லவனாதல் 6. அடக்கம் 7. நடுவுநிலைமை 8. பகுத்துண்ணல் 9.மாசற்று இருத்தல் 10. கள் காமம் அற்று இருத்தல்.(536) . இனி நியமம் பற்றி 537 , 538, 539 ஆகிய பாடல்களில் உரைப்பார். இதனை அகத்தொழுக்கம் என்பர். அவை
1. நீதி உணர்தல்
2. தூய்மை
3.அருள்
4.ஊண் சுருக்கம்.
5.பொறை
6. செம்மை
7. வாய்மை
8.காம உணர்வு நீக்கல்
9. களவு எண்ணம் நீக்கல்
10. கொலை புலை தவிர்த்தல்.


என்றும் தவம், மந்திரம் போற்றல் , சிவமகிழ்வு , அடியார்க்கு அளித்தல், சிவநோன்பு, சித்தாந்தம் கேட்டல், விருந்து போற்றல்,சிவவழிபாடு என்றும் கூறுவர்.

இயமம் நியமம் போற்றி ஓகத்துக்குரிய இருக்கையாகிய ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளல் வேண்டும். திருமூலர் காலத்திலேயே ஆசனங்கள்
" எட்டு எட்டு பத்தொடு நூறு பல" ஆயின. திருமூலர் தாமரை இருக்கை என்னும் பதுமாசனம் பற்றி 540,541ம் பாடல்களில் உரைப்பார். அடுத்துப் பத்திராசனம் பற்றி 542 டிலும், குக்குட ஆசனம் பற்றி 543 ம், சிங்க ஆசனம் பற்றி 544 லிலும் விளக்குவார். இவற்றுள் உத்தமமானது "பத்திரம், கோமுகம்,பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாதனம், ஓரேழும் " ) 545 என்று கூறக் காண்க. இதனால் ஓகு பயில்வார் தத்தம் நோக்கத்திற்கும் , தகுதி நிலைக்கும் ஏற்ப ஆசனத்தை மேற்கொண்டனர் என்பதை அறியலாம்.


வளிநிலைப் பயிற்சி:

இதனைப் பிராணாயாமம் என்பர்.  திருமூலர் 546 முதல் 558 வரை இதனை விளக்குவார். இடகலை , பிங்கலை என்னும் இரு நாடிகளை வசப்படுத்தி சுழுமுனையை மேல் நோக்கி எழுந்து ஆற்றல் பெறச் செய்யும் மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்யும் வழிவகைகளை இங்குக் கூறுகின்றார். சிவனருளால் பிராணன் மனத்துடன் அடங்கி (புலன் களுடன் செல்லாமல்) நின்றால் பிறப்பு இறப்பு இல்லை(549) என்று கூறக் காண்க. ஓக சாதனையின் நோக்கமே சாவாத இறவாத பேரின்பம் கூடல் ஆகும். மேலும் அவர் " காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது ஆமே" (553) என்று கூறுவதையும் காணின் உடல் , உயிர் நலம் யாவும் சாவா மருந்து என்னும் மூச்சுப் பயிற்சியே என்பதையும் உணரலாம். தேவர்கள் அமுதம் கடைந்த கதையும் இதுவே எனவும் நினைக்கலாம்.


அடுத்த நிலை, தொகுத்து நிலை நிறுத்தும் பிரத்தியாகாரம் ஆகும். அதாவது உயிர்வளியைத் தொகுத்து வேண்டும் அளவும் நிலை நிறுத்தத் தக்க பயிற்சியாகும் இது. இங்கு குண்டலினி ஓகம் செய்யும் முறை கூறி உயிராற்றலைச் சிவ ஆற்றலாக மாற்றும் முறைகளை 559 முதல் 567 வரை உள்ள மந்திரங்களில் கூறுவார். (   இங்கு திருமூலர் கூறும் இருவகையான மூச்சுப் பயிற்சியை நாம் அறிதல் நலம் 1. நான்கு முறை 'சிவ சிவ' என்று சொல்லும் நேரத்தில் மூச்சினை ஒரு மூக்கின் வழி உள்  இழுக்க வேண்டும். அதனை 16 முறை 'சிவ சிவ' எனச் சொல்லும் நேரத்திற்கு உள்ளே வைத்திருக்க வேண்டும். பின்னர் 8 முறை 'சிவ சிவ' எனச் சொல்லும் நேரத்தில் அடுத்த மூக்கின் வழி மெல்ல வெளிவிடல் வேண்டும். இதனையே ஒரு மூக்கின் வழி 4முறை 'சிவ சிவ' எனச் சொல்லும் நேரத்தில் உள்ளே இழுத்து அடுத்த மூக்கின் வழி 8 முறை 'சிவ சிவ' எனச் சொல்லும் நேரத்தில் வெளிவிட வேண்டும். பின்னர் 16 முறை 'சிவ சிவ' எனச் சொல்லும் நேரத்தில் மூச்சை உள்ளிழுக்காமல் இருக்க வேண்டும். இதனை தினந்தோறும் மூன்று வேளை 5 நாழிகை பயில வேண்டும் என்பதையும் மனதில் இறுத்துக. இதனால் மூன்று குற்றங்களாகிய வாயு, பித்தம், கபம் நீங்கும் என்று கூறுவதையும் காண்க )

பின்னர், பொறை நிலை என்னும் தாரணை மேற்கொள்ளல் வேண்டும். அகத்தவம் சிறக்க புலன் வழிச் செல்லும் மனத்தினை மடைமாற்றம் செய்து  கீழ்நோக்காது மேல் நோக்கிச் செல்லும் வண்ணம் செலுத்துதல் வேண்டும் . 33 வது முள் எலும்பில் உறங்கும் நடுநாடி என்னும் ஞான நாடியை மேலே கொண்டுவந்து உயிராற்றலை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் அமுதம் கிட்டும். இதனை 568 முதல் 577 வரை உள்ள பாடல்களில் கூறக் காண்க. தாரணைக்கு அடுத்த நிலை தியானம் என்னும் நீள நினைத்தல் ஆகும்.

இதனைப் பற்றி திருமூலர் 578 முதல் 597 வரை விளக்குவார். இதனை சக்தி பற்றியது, குரு பற்றியது என இருவகை படுத்துவர் (578).அகவொலி கேட்டுப் பிறப்பற்ற நிலை காண முயலுதல் இதன் நோக்கம் (579) . புருவநடுவில் உற்றுப் பார்க்க அகக் கண்ணில் அருள்ஒளி தோன்றும். அங்கே சிவனைக் காணல் இயலும் (580). பின்னர் புருவ நடுவில் வெண்ணிறத் தாமரைப்பூத் தோன்றும். (581) .
காம, வெகுளி மயக்கங்கள் அறுத்து மனத்துள்ள மாயா விளக்கினைத் தூண்ட அணையா விளக்குத் தோன்றும் (582). உள் நாடி உள்ளே ஒளி பெற நோக்குக.(583) . நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைக்க(584). மணி , கடல் , யானை, குழல் , மேகம் , வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் , போன்ற அகத்தோசையாகிய திருச்சிலம்போசை கேட்கும்(586).  அகத்தவம் முற்றக் கடல் , யானை, குழல் , சங்கு ஓசை கேட்கும்(587).  நாத முடிவில் நல்லாள் இருப்பது, நாட்டம் இருப்பது கண்டு முடிவில் நஞ்சுண்ட கண்டன் இருப்பதைக் காண்க(589) .  நாதம் ஒடுங்கக் கழல் சேரலாம்(590).மரணமிலாப் பெருவாழ்வு சித்திக்கும்( 591) . உடல் அழியாத நிலையை ஓகத்தால் பெறலாம்(592).  ஆணவம் அகல, மாயை நீங்க, வல்வினை ஒழியச் சிவன் அருளும்(597). 


பின்னர் நொசிப்பு என்னும் சமாதி நிலை கை கூடும் . இதனைப் பற்றித் திருமந்திரம் 598 முதல் 611 வரை விளக்கக் காண்க. இவ்வழி நிற்கச் சமாதி கை கூடும்.( சமம் + ஆதி = சமாதி . அதாவது ஆதியாகிய மூல முதலுடன் ( சிவத்துடன்) கலந்து , கரைந்து உயிர்கள் ஒன்றித்துப் போவதே சமாதி ஆகும் ) . விந்து நாதங்கள் மேருவில் (புருவ நடுவில்) ஒடுங்கச் சுந்தரச் சோதி தோன்றும். சிவமனம் பெற்றுச் சிவமணம் கண்டார் மனம் லயம் ஆகும். உச்சித் துளை வழி கண்டவர்க்குக் காலன் இல்லை. தம் தோட்டடத்து மாம்பழம்போல இனிக்கும் இன்பம் உண்டாகும்.  உயிர்ப்புப் பயிற்சியால்  அமுதம் கிட்டும். அருள் வடிவாக அரன் தோன்றுவான். பிரியாத திருவருள் நிட்டை கூடும் . சிவன் உள்ளே உதிப்பான்.  சமாதியில் 8 சித்தியும் கை கூடும்.



எட்டுச் சித்திகள்:

அட்டமா சித்தி என்னும் பகுதியில் ஓக சாதனை மூலம் மனிதன் பெறும் விந்தை மிக்க ஆற்றல்களை எல்லாம் விரிவாகக் கூறுவர்.
1051 நாடி (676), 10 நாடி(677) , உயிர்ப்பு 56(301),சங்கம், தாமரை என்னும் பேரெண்ணின் மிக்கதாகியது உயிப்பு என்னும் செல்வம்(681) .
233 நாடி (681) , 729 நாடி(682) உயிர்ப்பினை உள்ளடக்க அமிழ்தம் தோன்றும்.(683) என்னும் செய்திகளுடன் கீழ்வரும் ஓக முறைகளைப் பற்றியும் திருமந்திரம் கூறுகிறது.

1. எட்டு யோகம்(1285)   2. சிவயோகம் (1408 முதல் 7 பாடல்கள்)   3. சிவராச யோகம் (1284)     4.யோக நற்சக்தி ( 1148)   5.சுகயோகம்(1149 முதல் 16 பாடல்கள்)   6. யோகானந்தம் (405)   7.அட்டாங்க யோகம்( 612 - 619)   . 8. மாயோகம்(562)  9.கேசரி யோகம்(804)  10. பரியங்க யோகம் (810,811)
11.சிவயோகி (984) 12.யோகி(1019, 1061)  13.யோகமகா சக்தி(1160)    14.போகம்(1464)   15.சக்தியோகம்(1032-1034)  16. யோக சமயம் (1439)17. யோக முத்திரை (1860)  . 18. யோகி அமிழ்து (1912, 1913)     19.சிவயோகம்(2982)   பற்றிய செய்திகளும் திருமந்திரத்தில் பேசப் படுகின்றன. இதனால் சித்தர்கள் கண்ட ஓக முறைகள் சிறப்பாக இங்கு வழக்கில் இருந்த பாங்கு புலப்படும்.

முடிவுரை:

திருமந்திரத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு வகையான பொருள்களைக் காண வேண்டும் என்பதால் இடர்ப்பாடுகள் பல உள்ளன. திருமூலர் கூறும் ஓகு முறைகள் இன்று வழங்கும் முறைகளை விட்டு விலகிச் சென்றுள்ள பாங்கினை எளிதில் அறியலாம். வைதிகம் அனைத்தையும் காசு பறிக்கும் கயமைக்கு ஆளாக்கிவிட்டது. இன்று தியானம் , யோகம்  யாவும் வணிகப் பொருள்கள் ஆகிவிட்டன. திருமூலர் கூறும் யோக சாதனைகளை பயிற்றுவிக்கும் அறிவர் கூட்டம் இன்று நடைமுறையில் இல்லை. அறிந்ததாகக் கூறும் சிலரும் முற்றாக அறிந்திலர். சித்தர் நெறி நின்று, திருமந்திரத்திற்கு விளக்கம் காணும் நாள் விரைவில் வரவேண்டும் என வேண்டுவதே இப்போதைக்கு உரிய செயலாகும்.

No comments:

Post a Comment