Saturday, March 26, 2011

தமிழ்க் கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் ஆய்வு(கி.மு 3 - கி.பி19): கோவை ஞானி அவர்களின் அணிந்துரை


தமிழ்க் கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் ஆய்வு(கி.மு 3 - கி.பி19): கோவை ஞானி அவர்களின் அணிந்துரை




இந்தியாவின் வரலாற்றில் தென்னிந்தியா குறிப்பாகத் தமிழ் நாட்டு வரலாறு புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவின் வரலாற்றை தென்னகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதைப் போலவே இந்திய நாகரிகம் என அறியப்படும் நாகரிகத்தின் மேலடுக்கு ஆரியமாக இருக்கிறது என்ற போதிலும் அந்த மேலடுக்கை நீக்கி விட்டுப் பார்த்தால் இந்திய நாகரிகம் என்பது திராவிடத்தமிழர் நாகரிகம் தான் என்பதையும் வரலாற்று அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இம்முறையில் தமிழக வரலாறு குறித்த ஆய்வுகள் இன்றைய சூழலில் மேம்படுவதற்கான தேவைகள் கூடுதலாகி வருகின்றன.

இந்துத்துவத்திற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தில் தமிழக வரலாறு பற்றிய ஆய்வுகள் நமக்குப் பெரும் துணை செய்யும்.தமிழ் மொழியின் தொன்மை, தமிழிசையின் தொன்மை , கடலியல் ஆய்வுகள் முதலியவை  நமக்குப் பெரிதும் கை கொடுக்கும் என்பதில் அய்யம் இல்லை.

இந்தியாவிலேயே வரலாற்றைத் தொகுப்பதற்கான சான்றுகளில் மிக முக்கியமான சான்றுகள் எனப் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கல்வெட்டுச் சான்றுகள் தமிழகத்தில் தான் பெரும் தொகையில் கிடைக்கின்றன. இவற்றைப் போலத்தான் ஓலைச்சுவடிகளும் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு மேற்பட்டதும் பல நூறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளதுமான தமிழ் இலக்கியமும், இலக்கணமும் வரலாற்றின் அறிதலுக்கு  தேவையான சான்றுகளை வழங்க முடியும். தமிழகத்தின் கோயில் மற்றும் சிற்பக் கலைகள் , நடனக்கலை , தமிழ் இசை, சித்த மருத்துவம் , கல்லணை முதலிய கட்டமைப்புக்கள், தொன்மையான வேளாண்மை , தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை முதலியனவும் நம் வரலாற்றின் மேன்மைக்கான சான்றுகள். இவற்றோடு தமிழ் அறம் எனச் சிறப்பித்துச் சொல்லக் கூடிய அறவியலும், ஒரு அற்புதமான சான்றாகத் திகழ முடியும்.

தொன்மைக் கல் வெட்டுக்கள் பற்றிப் பல பத்தாண்டுகளாக ஆய்வு முயற்சிகள் தொடந்து நடைபெறுகின்றன. அவற்றில் ஒரு பகுதி மட்டுமே நூல் வடிவில் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. மைய அரசு மற்றும் மாநில அரசும் அக்கரை குறைந்த நிலையில் தனிப்பட்ட ஆய்வாளர்கள் இந்த முயற்சியில் தொடந்து ஈடுபட வேண்டியவர்களாக உள்ளனர். இவ்வகையில் தமிழ் உணர்வாளர்களின் பெரும் ஈடுபாட்டை நாம் மனம் குளிரப் பாராட்ட முடியும்.

வரலாற்று ஆய்வு என்பது வெற்றுச் சடங்ககான ஆய்வாக இருக்க முடியாது. தனது சொந்த வரலாற்றைத் தேடித் தொகுத்துக் கொள்ளும் இனம்தான் நிகழ்கால மற்றும் எதிர்கால வரலாற்றில்  தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஊக்கத்தைப் பெற முடியும் , இவ்வகையில் உலக அளவில் தொன்மையான வரலாற்றை உடைய தமிழ் இனம் இன்றைய உலக அளவிலான  கடும் நெருக்கடிகளுக்கு இடையில் தன்னை இழந்து விடாமல் காத்துக் கொள்வதற்கும் இத்தகைய முயற்சிகள் பெரும் அளவில் தேவைப் படுகின்றன. இந்தப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் தமிழ் அறிஞர்கள் , வரலாற்று ஆய்வாளர்கள் நம் வணக்கத்திற்குரியவர்கள்.  அவர்களில் ஒருவர் எனப் பேராசிரியர் கா.அரங்கசாமி அவர்களை நாம் மதிக்க முடியும். தமிழ் வரலாற்று ஆய்வில் தனக்கென ஒரு தனித்தன்மையையும் , இவர் கொண்டிருப்பதற்காகவும் இவரை நாம் போற்ற முடியும்.

தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களில் அறவியல் குறித்த ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். கல்வெடுக்களைப் பற்றிய ஆய்விலிருந்து தமிழ் மக்களின் வரலாறு சமூகவியல் , சமயம் , வாழ்வியல், கலைகள் எனப் பலவற்றைத் திரட்டி ஆராய முடியும். அறிஞர்கள் பலர் அத்தகைய ஆய்வுகளில் பல கால மாக ஈடுபட்டுச் சாதனை செய்து இருக்கிறார்கள்.

வரலாற்று ஆய்வில் தொடர்ந்து தரவுகளைத் திரட்டுவது என்பது ஒரு பகுதி. இந்தத் தரவுகளுக்கு அடியில் இயங்கும் வரலாற்றைக் காணும் முறையில் சில கருத்தாக்கங்கள் - கோட்பாடுகளைப் படைப்பது என்பது வரலாற்று ஆய்வின் இன்றியமையாத பகுதி. பல்லாயிரம் கல்வெட்டுக்களில் இருந்து விவரப் பட்டியல்களைத் திரட்டும் முயற்சியில் எத்தனயோ பேர் ஈடுபட்டுள்ளனர்.ஒரு சிலர்தான் வரலாற்றுக்குப் பொருள் காண்கின்றனர்.  கருதுகோள்களை முன்னிருத்தித் தரவுகளுக்குப் பொருள் சொல்லும் ஆய்வுகள் ஒரு வகையில் கோட்பாடு - தத்துவம் சார்ந்தவை. பல துறைகள் சார்ந்த அறிவில்லாமல் அத்தகைய ஆய்வில் நுழையமுடியாது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் இருந்து , தமிழ் வரலாற்றின் அடியில் நீரோட்டமாக இயங்கும் அறவியலைக் காணும் முறையில் அறிஞர் கா.அரங்கசாமி அவர்கள் இந்த ஆய்வினைச் செய்துள்ளார்.

கல்வெட்டு ஆய்வாளருக்கு அறவியல் என்ற கண்ணோட்டம் தேவையானதென்று பலர் எண்ண மாட்டார்கள். மக்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பது அறம் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
பொருளுக்கும் , அதிகாரத்திற்கும் ,  மத ஆதிக்கத்திற்கும் ஊழலுக்கும் இடங்கொடுத்த சூழலில் தமிழ் மக்கள் இன்று புறத்தில் மட்டும் அல்லாமல் , அகத்திலும் சிதைந்து வருகின்றனர். எனவே அடிப்படை அறத்தை நோக்கி நம் கவனத்தைக் குவித்தாக வேண்டும்.

இம்முறையில் தான் அறிஞர் கா.அரங்கசாமி அவர்கள் வள்ளுவத்தை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார்.
வள்ளுவத்தை வடவரின் அறத்தோடும் மேற்கத்தியரின் அறத்தோடும் ஒப்பிட்டு ஆராய்கிறார். வள்ளுவருக்குள்ளும் பகுத்தறிவுப் பார்வை மேலோங்கி இருக்கிறது. வள்ளுவர் கூறும் பொதுமை அறம், மார்க்சியத்தோடு ஒத்தது.காந்தியத்தையும் , வள்ளுவருக்குள் காணமுடியும். காந்தியமும் ,  மார்க்சியமும் வள்ளுவருக்குள் முரண்படவில்லை . அப்படியொரு கருத்தியலை அரங்கசாமி அவர்கள் தனக்குள் படைத்துக் கொள்கிறார். இதை தமிழ் அறம் என்று நம்மால் காண முடியும். வள்ளுவரின் ஒப்புரவை இன்றைய சமதர்மம் எனப் பொருள்படுத்த முடியும். வள்ளுவரின் சான்றாண்மையைக் காந்தியம் எனப் பொருள்படுத்த முடியும். வள்ளுவருக்குச் சாதியோடு , சடங்குகளோடு உடன்பாடில்லை.
வள்ளுவரின் அறம் தமிழ் அறம்.

தமிழ் வரலாற்றில் தேடிச்செல்லும் பொழுது இந்தத் தமிழ் அறத்தை மேம்படுத்தியவர்கள் என சமணர்களையும் , பவுத்தர்களையும் நாம் குறிப்பிட முடியும். மேலும் தமிழ் அறத்தின் வேராக உள்ள தொல்காப்பியரையும் , இளங்கோவடிகளையும் , சாத்தனாரையும் நினைவு கூறலாம். தமிழ் அறத்தின் தொடர்ச்சி எனத் திருமூலர் முதல் வள்ளலார் வரையிலான தமிழ்ச் சித்தர்களையும் அப்புறம் பெரியாரையும் நாம் தயக்கமின்றிச் சொல்ல முடியும்.

தமிழனுக்குச் சாதி இல்லை மதம் இல்லை சடங்குகள் தேவை இல்லை . தமிழனுக்குத் தேவை சமத்துவம்,   சமதர்மம் ,  இந்தப் பேருண்மையைக் கண்டறியவும், வெளிப்படுத்தவுமே அறிஞர் அரங்கசாமி இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார் என இனி நாம் காண்போம்.



பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவரங்களை இந்த ஆய்வு நூலில் தொகுத்துத் தருகின்றார். இந்த விவரங்களுக்குள் வாசகர்கள் இயல்பாகப் பயணம் செய்ய முடியும். ஆங்காங்கே எத்தனையோ விந்தைகளைக் கண்டு மகிழ முடியும். சிற்சில சமயங்களில் வேதனைப்படவும் நேரும்.


வரலாற்று நாவல்கள் , சிறுகதைகள், ஆகியவற்றைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வமுடையவர்கள் தமக்குத் தேவையான கருக்களைக் கண்டு கொள்ள முடியும் .  கல்வெட்டுக்களில் இடம்பெறும் தமிழின் உரைநடை வழக்காறுகளையும், இலக்கியத் தரத்தையும் கண்டு சுவைக்க முடியும். மெய்க்கீர்த்திகளில் அவற்றைப் படைத்தவர்களின் கற்பனை வளத்தைக் காணமுடியும், கவிதைக்கும் அங்கெல்லாம் குறைவில்லை. புகழ் மொழிகளைப் போல வசை மொழிகளையும் கேட்டுச் சுவைக்கலாம். கல்வெட்டாய்வில் வரலாற்றைத் தேடும் பொழுதே இவ்வகைச் சுவைகள் எல்லாம் நமக்கு இலவய இணைப்புக்களாக கிடைக்கின்றன. அவற்றைக் கடந்து அவற்றின் அடியில் உள்ள அறவியலை நாம் காணத் தவறக் கூடாது.


கி.மு. 5 ம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் நடுகற்களைக் காண்கின்றோம். ஊருக்காக மக்களுக்காகத் தம் உயிரை ஈந்த வீரர்கள் பற்றிய குறிப்புக்களைப் பழந்தமிழில் அந்தக் கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தத் தனிமனிதர்களின் அறச்செயல்கள் அற்புதமானவை. வேறு எந்த நோக்கமும் இல்லாமல் மக்களுக்காக உயிர் ஈந்தவர்கள் அவர்கள். அறத்தின் தனி நிலை என ஆய்வாளர் இதைச் சரியாகவே குறிப்பிடுகிறார். சேர, சோழ, பாண்டியர்கள், மருத நில நாகரிகம், படையெடுப்புக்கள், அழிவுகள், ஆக்கங்கள் , என வரலாறு தொடர்கிறது. இந்தச் சூழலில் சமணர்களும், பவுத்தர்களும் இங்கு ஆக்கம் பெறுகிறார்கள். தமிழ்க் கல்வியை தமிழ் அறத்தை இவர்கள் மேம்படுத்துகிறார்கள். அவர்களின் அறச்செயல்கள் கல்வெட்டுக்களில் பதிவாகியுள்ளன. இவற்றினுள்ளும் அறச்சார்பின்றி சமயச்சார்பை  மிகுதியாகக் காணமுடியவில்லை. மன்னர்கள் ஆதரவோடு பிராமணர்கள் இங்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு ஏராளமான நிலக்கொடைகள், ஊர்க்கொடைகள் தரப்படுகிறன. வேதக்கல்வி  முதன்மையாகிறது. வேள்விகள் நடைபெறுகின்றன. அறம் சமயச்சார்பைப் பெறுகிறது. கோயில்கள்  சமூக வாழ்வின்  மையத்தில் எழுகின்றன. முந்தைய வழிபாட்டுச் சூழல் மாறுகிறது. எனினும் நம் தமிழ்ச் சமூகம் அழிந்து விடவில்லை . நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர் அவைகள் செயல் படுகின்றன. ஊர் அவையில் பல வகையான வாரியங்கள் உள்ளன. ஏரி , குளங்கள் காக்கப்படுகின்றன. ஊரில் எழும் சிக்கல்கள் ஊரவையால் தீர்வு பெறுகின்றன. அங்கெல்லாம் அதிகாரம் அநீதி இல்லை.   கொலைக்குத் தண்டனை இன்னொரு கொலை என்ற அநாகரிகம் இல்லை . என்னதான் கடுமையான குற்றங்கள் எனினும் அவருக்கு ஊர் அவையுள் விதிக்கின்ற தண்டனை கோயிலில்  விளக்கேற்றுதல் , விளக்கிற்குத் தேவையான நெய்க்காக ஆடு மாடுகளை கோயிலுக்கு ஒப்படைத்தல் ஊர் அவையில் வழக்குகளை ஆராயும் சான்றோர்களுக்குச் சீரிய தகுதிகள் நிர்ணயிக்கப் படுகின்றன. அவர்களில் ஒருவர் தவறு செய்தாலும் அவரின் உற்றார் உறவினர்களுக்கு கோயில் நிர்வாகத்தில் பங்கு இல்லை. பிராமணர்களுக்குச் சில சலுகைகள் உண்டு எனினும் அவர்களும் தண்டனை பெறுகின்றனர்.  கோயிலுக்குக் கொடை தருவதில் மன்னர்களுடன் அவர்தம் மனைவியரும் இடம்   பெறுகின்றனர். சாதிப்படியில் கீழே உள்ளவர்களின் நன்கொடைகளும் கோயில்களில் ஏற்கப்பட்டுள்ளன. தேவர் அடியார்களும் ஊரவையில் இடம் பெற்று இருந்தனர்.  அயலூரில் இருந்து தொழிலாளர்கள் பிற ஊருக்கு வரக்கூடாது. பெண்களுக்கும் சொத்துரிமையில் பங்கு உண்டு.
ஊர் அவைகள் மக்களின் வறுமையைத் தீர்த்தன. மருத்துவம் தந்தன. விதவைப் பெண்கள் தம் சொத்துக்களைத் தாமாக விற்க உரிமையில்லை. இறந்த கணவனோடு பெண்கள் புதைக்கப் பட்டதும் , எரியூட்டப்பட்டதும் உண்டு எனினும் இது பரவலாக இல்லை. வறுமை மிக்க சூழலில் மக்கள் தம்மைத் தாமே விற்றுக்கொண்டனர். வர்ணாசிரமம் இங்கு நிலை பெறத்துடித்த போதிலும் அதற்கு எதிரான கலவரங்களில் மக்கள் ஈடுபட்டனர். இங்குச் சத்திரியர் இல்லை.




இப்படி எல்லாம் விவரங்களை அடுக்குகிறார் பேராசிரியர் கா.அரங்கசாமி அவர்கள். விசயநகர மன்னர்கள் நாயக்கர்கள் ஆட்சியின் போதுதான் ஊரவை என்ற குடியரசுகள் அழிவுக்குள்ளாயின. முன்பெல்லாம் குடிமக்கள் செலுத்தக் கூடிய வரியினை அரசன் அவர்கள் மேல் திணிக்க முடியாது , ஊரவையின் ஒப்புதல் பெற்ற பின்னரே வரி வாங்க முடியும். விசயநகர மன்னர் காலத்தில் நிலைமை மாறியது. பின்னர் முகம்மதியர் , ஆங்கிலேயர்கள் வந்து சேர்கின்றனர்.


தமிழ்ச் சமூகத்தில் இடங்கை வலங்கை மோதல்கள் இருந்தன. அவ்வப் பொழுது நியாயம் வழங்கினர். சாதிக்கலவரங்கள் கூட பேரளவில் இல்லை. மதங்களுக்கு இடையில் பாண்டியன் சோழன் மெய்கீர்த்திகளில் அறவியல் கூற்றுக்கள் இடம் பெற்றன. தமிழர் கலைகளுக்கும் இடம் இருந்தன. விசய நகர மன்னர்களின் மெய்கீர்த்திகளில் பிராமணர்களின் செல்வாக்கு மிகுதியாக இருந்தது. இவ்வரெல்லாம் ஏராளமான விவரங்களோடு தமிழகச் சூழலில் அறவியல் வரலாற்றாய் பேராசிரியர் ஆய்கின்றார். தமிழரின் அறம் அழிந்துவிடவில்லை என்பதைத்தான் திரும்பத்திரும்ப அழுத்திச் சொல்கிறார். அறவியல் குறித்துத் தமிழில் சுயமான ஆய்வுகள் இல்லை. மேலை மற்றும் கீழைத் தேயங்களில் அறவியல் குறித்துப் பேராசிரியர் கா.த.திருநாவுக்கரசு அவர்களின் நூலை அடுத்து வேறு நூல்கள் தமிழில் இதுவரை வெளி வரவில்லை.நவீன காலத்தில் தமிழ் ஆக்கம் பெறுவதற்கு அறவியல் மற்றும் மானுடவியல் குறித்த முதல் நூல்கள் தமிழுக்குத் தேவை. அறம் இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை  என்ற உணர்வுதான் தமிழ் உணர்வாக இருக்க முடியும்.




              தமிழறிஞர் என்பவர் அறவுணர்வுக்கு முதன்னை தரக்கூடிய சான்றோராக இருக்க வேண்டும். கல்வெட்டாய்விலும் கா.அரங்கசாமி அவர்கள் தனது தனித்தன்மையை நூல்நெடிகிலும் புலப்படுத்துகிறார்.
கொங்கு நாட்டின் தனித்தன்மை பற்றிச் சொல்லுகிறார். நடுகல் ஆய்வில் தன் கண்டுபிடிப்புப் பற்றிச் சொல்லுகிறார். இடங்கை வலங்கை  சாதிமுறை பற்றியும் ஆய்ந்துள்ளார். கோயிலின் தோற்றம் பற்றியும் முடிவு கண்டுள்ளார்.


மெய்க்கீர்த்திகளில் மனுநீதிச் சாயல் காணப்பட கொங்கு மெய்கீர்த்தியில் மட்டும் வள்ளுவரின் அறவியலுக்கு தலைமை இடம் தந்ததை எடுத்துக் காட்டியுள்ளார். அறப்புறங்கள் பற்றி விரிவாக ஆய்ந்துள்ளார். நிறைந்த பட்டியல்கள் வரைபடங்கள் வழி பல்வேறு உண்மைகளை நிறுவியுள்ளார்.
ஓம்படைக்கிளவிகளின் வழி நமது பண்பாடு , நாகரிகம் , அறவியல் யாவும் வைதீகக் கேட்டால் அழிந்ததை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.  ஆயினும் பிராமணர்கள் வந்ததால் தான் தமிழ் மக்களின் வாழ்வு அடியோடு நாசமாயிற்று என்ற புலம்பலை ஆசிரியர் ஏற்கவில்லை. இந்த அளவுக்கு தமிழின் மீது தமிழ் அறத்தின் மீது ஆசிரியர் கொண்டுள்ள பற்றும் நம்பிக்கையும் நம் வணக்கத்திற்குரியவை.


                                                                                                                     --  கோவை ஞானி

1 comment:

  1. தங்களது கட்டுரை மிக அருமையான தகவல்களை நுணுக்கமாக தெரிவிக்கிறது. தங்களது நூல்களைப் படிக்க விரும்புகிறேன். எங்கே எப்படி வாங்குவது என்பதை தெரிவித்தால் நலமாக இருக்கும்.

    ReplyDelete