Thursday, April 7, 2011

ஐரோப்பாவில் தமிழ்

முன்னுரை:

                          மறைந்த குமரிக் கண்டம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்பார் சர்.சான்.மார்சல் , எலியட் என்னும் அறிஞர்கள். அத்துடன் தமிழ் மொழி தோன்றி 50,000 ஆண்டுகள் சென்றன என்பதையும் , குமரிக்கண்டம் அழிந்தது என்பதையும் உறுதிப் படுத்துவதற்கும் பல சான்றுகள் கிடைத்துள்ளன. மெக்சிகோவிலுள்ள மயன் நாகரிகமும், தென் அமெரிக்காவிலுள்ள பழங்க்குடி மக்கள் பேசும் தமிழும் இதனை உறுதி செய்யும்.
    
                         மேலும் இரசிய கடலியல் அறிஞர்கள் தெற்குமாகடலை ஆய்ந்து கண்ட உண்மைகளும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கின்றன. அண்மையில் மறைந்த பூம்புகார் நகரில் நடந்த கடல் ஆய்வில் பழந்தமிழ் எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு கிடைத்தது. கார்பன்-14 அணுச் சோதனையில் அதன் காலம் கி.மு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்தனர். இதனாலும் தமிழின் தொன்மையும் , குமரிக்கண்ட உண்மையும் உறுதியாயிற்று. மற்றும் வட அமெரிக்காவில் பிலடெல்பியா மாநிலத்தில் கொலராடோ நதிக்கரையில் நடந்த அகழ்வு ஆய்வில் கிடைத்த சிவலிங்கத்தின் காலத்தையும் அணுச் சோதனை முறைப்படி கி.மு 10,000 லிருந்து 1 இலட்சம் ஆண்டுகள் வரை என்று முடிவு செய்தனர்.
                 இதனை உறுதி செய்வதறகான பல சான்றுகளை எமது இங்கிலாந்து , ஐரோப்பா பயணத்தின் போது நேரில் காண முடிந்தது. உலகில் ஏறத்தாழ 7,000 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன என்பர். அவற்றுள் 1,800 மொழிகளுக்கு எழுத்தும் , வேர்ச்சொல்லும் 180 மொழிகளுக்கு உறவுப்பெயர்களும் தந்த பெருமை தமிழுக்கு உண்டு என்பதை ஐரோப்பாவில் நேரில் காணமுடிந்தது. வானஊர்தியில் செல்லும் போது மத்திய தரைக்கடல் பகுதியில் 'சிவன்'  ,  'சிவம்' , 'சிவன்ஸ்' என்னும் ஊர்ப்பெயர்களைப் பார்த்தபோது பெரிதும் வியப்பாக இருந்தது. இதனை மேலும் உறுதி செய்யும் வண்ணம் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்ப்பெயர்கள் ஐரோப்பாக் கண்டத்தில் தமிழாக இருப்பதையும் காண முடிந்தது. எனவே இங்கு இவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்:

                         இங்கிலாந்திலுள்ள தீபம் தொலைக்காட்சியில் உரையாற்றும் போது "SEGMENT" என்ற ஆங்கிலச் சொல்லின் வேர் ஆங்கிலத்தின் மூல மொழிகள் என்று தவறுதலாகக் கூறப்படும் ஆங்கிலோ சாக்சன் , ஈப்ரு, இலத்தீன் , கிரீக் போன்ற எம்மொழிகளிலும் இல்லை. ஆனால் உலகத்தாய் மொழியான தமிழில் அச்சொல்லின் வேர் உள்ளது. திருக்குறளில் அச்சொல்லின் வேரினை திருவள்ளூவர் பயன் படுத்தி உள்ளார். அச்சொல்லின் வேர் 'செகு'  அல்லது 'செகா'   என்பதாகும்

  ' அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து  உண்ணாமை நன்று ' 

என்னும் குறளில் திருவள்ளுவர் 'செகு' என்னும் வேர்ச்சொல்லை துண்டு செய்தல் , கொலை செய்தல் என்னும் பொருளில் பயன்படுத்ததக் காணலாம். இன்றும் ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு கடந்து இச்சொல் கொங்கு நாட்டில் வழக்கத்தில் உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு நிலத்தைப் பாகப் பிரிவனை செய்யும்போது துண்டு செய்யப்பட்ட நிலத்துக்கு 'செகுப்பந்தி' (செக்குப்பந்தி) எழுதும் வழக்கத்தை இன்றும் காணலாம்.

                   இந்தச் செய்தியைச் சொன்னவுடன் நார்வேயிலிருந்த தமிழ் அன்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நார்வே மொழியில் உறவுப் பெயர்களும் , வேர்ச்சொற்களும் தமிழாக இருப்பதை இன்றும் நாங்கள் பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார்.

                அடுத்த அன்பர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் ஆட்சிமொழியாக உள்ளன. மக்கள் தொகை 1 கோடிதான் அதில் ரோமான்ஞ் என்னும் பழங்குடி மக்கள் பேசும் மொழியில் ஏராளமான தமிழ் வேர்ச்சொற்களும் உறவுப்பெயர்களும் தமிழாக உள்ளன என்றார். அத்துடன் அம்மக்கள் பிறமக்களுடன் தொடர்பு கொள்ளாமல் பழங்குடி மக்களாக மலைகளில் 15 இலட்சம் பேர் வாழ்கின்றனர் என்றும் கூறினார். இதனால் 200 மொழிகளுக்கு மேல் கற்ற தமிழ் அறிஞர் " சாத்தூர் சேகரன்" அவர்கள் உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி என்ற ஆய்வும் உறுதிப் படுகின்றது.



ஐரோப்பாவில் தமிழ் ஊர்ப்பெயர்கள்:

                               எங்கள் ஐரோப்பாப் பயணம் 5/8/2005 அன்று தொடங்கியது . நாங்கள் சென்ற பேருந்து இங்கிலாந்தினுடைய "டோவர்" துறைமுகத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டு  பிரான்சின் "கலை" துறை முகத்திற்கு சென்றது. அங்கே இறங்கியததும் "பெல்சியம்" நாட்டுக்குள் சென்றோம் அந்த நாட்டின் தலை நகரைப் பார்த்து விட்டு. "லக்சம்பர்க்" செல்லும் வழியில் எதிரெதிராக இரண்டு ஊர்களின் பெயர்களைப் பார்த்ததும் இறங்கிப் படம் எடுத்துக் கொண்டோம் அந்த ஊர்களின் பெயர் "எம்மூர்" , "நம்மூர்" என்பதாகும் .

                             பின்னர் ஐரோபபா முழுவதும் பயணம் செய்யும் போது இத்தகைய தமிழ்ப் பெயர்கள் நூற்றுக்கு மேல் இருப்பதைக் காண முடிந்தது .  இதன் காரணம் மொகஞ்சதாரோ , அரப்பா நாகரிகம் ஐரோப்பா முழுதும் பரவியதன் பயன் என்று அறிய முடிந்தது. மொகஞ்சதாரோ , அரப்பா நாகரிகம்  கி.மு. 3,500 என்று கூறி வந்தனர் அண்மையில் கராச்சிக்கு அருகிலுள்ள 'லோத்தல்" ல் அகழ்வு ஆய்வு நடந்தது. அங்கு கண்டெடுக்கப் பட்ட பொருள்களும் சிந்துவெளி நாகரிகப் பொருள்களும் , எழுத்துக்களும் ஒரே தன்மை உடையனவாக இருந்தன. "லோத்தலில்" கிடைத்த பொருட்களின் அணுச்சோதனையில் அவற்றின் காலம் கி.மு. 9000 க்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.   மற்றும் நாகப்பட்டினத்திற்கு அருகில் கிடைத்த கற்கோடரியில் எழுத்தும் , தமிழகத்தின் பல பாகங்களில் கிடைத்த பழமையான எழுத்துக்களும் , சிந்து வெளி எழுத்துக்களாக உள்ளன.

                      சிந்துவெளியில் கிடைத்த முத்திரை எழுத்துக்களில் இரண்டு குறிக்கத் தக்கன. ஒன்று சங்க இலக்கியங்களில் வரும் "கட்டும் கழங்கும்" என்பதைக் குறிக்கும் முத்திரையாகும். பெண்கள் காதல் வயப்பட்டனர் என்பதை தாய்மார்கள் அறிவதற்காக செய்யும் உத்தியே கட்டும் கழங்கும் ஆகும். கட்டுவிச்சியாகிய குன்றத்து மகளிர் முருகனை அழைத்து ' வேலன் வெறியாட்டம் ' நடத்துவர். இதுவே "கட்டும் கழங்கும்" என்பர்.

                         இரண்டாவது முத்திரை சிவன் , ஆலமரத்தின் கீழமர்ந்து ஓகு செய்யும் தோற்றத்தைக் கொண்டதாகும். அது போக பல ஆயிரக்கணக்கான பொருட்களில் உள்ள எழுத்துக்கள் யாவும் தமிழகத்தில் கிடைக்கும் பழமையான எழுத்துக்களையே ஒத்துள்ளன. எனவே சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. ( இல்லாத ஆரிய நாகரிகத்தையும் , கெல்டிக் , செமட்டிக் , பொனீசிய போன்ற நாகரிகங்கள் என்று கூறி வந்தவர்கள் இன்று காணாமல் போய்விட்டனர்.  


முடிவுரை:

இங்கிலாந்தில் "கவண்டன்" போன்ற ஊர்ப்பெயர்களைக் கண்டு வியப்படையாதவர் இலர்.  இன்னும் பல ஊர்ப் பெயர்கள் இங்கிலாந்தில் தமிழாக இருப்பதை ஆய்ந்து காணலாம். எனவே உலகெங்கும் குமரிக் கண்ட அழிவால் தமிழர் பரவினர் , தமிழும் பரவியது  என்னும் உண்மையை நிலை நாட்டும் பணியை உண்மை அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் கருது கோளாகும்


No comments:

Post a Comment